ஓய்வூதிய வயதெல்லை 65: வர்த்தமானி வௌியீடு

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65: வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

by Bella Dalima 20-01-2022 | 3:15 PM
Colombo (News 1st) அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக நீடிப்பதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வ​கையில், அரசாங்க ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக திருத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. இதற்கமைய, எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதிற்கு பின்னர் ஓய்வு பெற்று செல்ல முடியுமென்பதுடன், 65 வயது நிரம்பிய பின்னர் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டுமென புதிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.