புனரமைக்கப்பட்ட சிறிமதிபாய பிரதமர் அலுவலகம் திறந்துவைப்பு

புனரமைக்கப்பட்ட சிறிமதிபாய பிரதமர் அலுவலகம் திறந்துவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2022 | 4:44 pm

Colombo (News 1st) புனரமைக்கப்பட்ட “சிறிமதிபாய” (Sirimathipaya)பிரதமர் அலுவலகம் இன்று (20) திறந்துவைக்கப்பட்டது.

கொழும்பு, பிளவர்ஸ் வீதியில் அமைந்துள்ள சிறிமதிபாய பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

நினைவுக் கல்வெட்டை திரை நீக்கம் செய்த ஜனாதிபதி, அலுவலக வளாகத்திலுள்ள புத்தர் சிலைக்கு மலர் தூவி பூஜை செய்த பின்னர் கடமைகளை ஆரம்பித்து வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு தபால் அட்டையும் நினைவு முத்திரையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் வௌியிடப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில், பிரதமரின் முன்னாள் செயலாளர் காமினி செனரத்தின் கண்காணிப்பின் கீழ், இலங்கை கடற்படையினரால் குறித்த மாளிகை புனரமைக்கப்பட்டுள்ளது.

02 மாடிகளைக் கொண்ட இந்த மாளிகை அல்பர்ட் இமானுவல் டி சில்வாவினால் தனது மகன், சேர் அல்பர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவிற்காக 1916 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுடன், 1960 ஆம் ஆண்டு அவரின் மறைவிற்கு பின்னர் குடும்ப உறுப்பினர்களால் அரசாங்கத்திற்கு கையளிக்கப்பட்டது.

கல்வி மற்றும் வானொலி அமைச்சு, உள்ளூராட்சி மன்றம் மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியன அக்காலத்தில் சிறிமதிபாயவில் இயங்கி வந்ததுடன், 1978 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் சிறிமதிபாயவில் பிரதமர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

100 வருடங்களுக்கு மேல் பழைமையான சிறிமதிபாய, 44 வருடங்களின் பின்னர் அதன் பழைய தோற்றத்திற்கே முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்