இலங்கைக்கு இலவசமாக அரிசி வழங்கும் சீனாவின் நோக்கம் என்ன?

இலங்கைக்கு இலவசமாக அரிசி வழங்கும் சீனாவின் நோக்கம் என்ன?

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2022 | 9:11 pm

Colombo (News 1st) இலங்கைக்கு இலவசமாக அரிசி வழங்க சீனா முன்வந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தற்போது உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் அதிகமானவை இந்தியாவின் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் மொத்தமாக இரண்டு வீதமே சேதனப் பசளை மூலம் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.

எனினும், இந்தியாவில் சேதன உரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் முதல் 10 பிராந்தியங்களில் தமிழ் நாடு இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சையரிசி 160 ரூபாவிற்கும் 190 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்படுகிறது.

உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்துள்ளதாலும் வௌிநாட்டு அரிசி சுமார் 50 ரூபா வரை குறைவாக கிடைப்பதாலும் மக்கள் வௌிநாட்டு அரிசியை வாங்கிச் செல்வதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் அரிசி இலங்கையின் உள்நாட்டு சந்தையை ஆக்கிரமிக்கும் போது, சீனா 10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு இலவசமாக வழங்க தயாராகின்றது.

அந்த அரிசி தொகையின் சந்தைப் பெறுமதி சுமார் 600 மில்லியன் டொலராக அமையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி W.A.விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

எதுவும் இலவசமாக கிடைக்காத காலத்தில், இது நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெறக்கூடிய ஒரு சிறந்த பரிசு என அவர் கூறினார்.

சீனா ஏன் இலவசமாக அரிசியை வழங்குகிறது? சீனாவின் CGTN செய்திச்சேவை இது தொடர்பில் எதிர்வுகூறலை வௌியிட்டுள்ளது.

இறப்பர் மற்றும் அரிசி உடன்படிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே இதன் நோக்கம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த உடன்படிக்கைக்கு 70 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதுடன், அது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்த போது கலந்துரையாடியுள்ளதாகவும் CGTN செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்