தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்பு: ஐ.தே.க வேட்பாளரின் தந்தை கைது

by Staff Writer 19-01-2022 | 8:33 PM
Colombo (News 1st) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாகும். பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கடந்த 11 ஆம் திகதி கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (17) கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் பிலியந்தலையில் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வைத்தியர் இன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் சமூக ஊடக செயற்பாட்டாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஓஷல ஹேரத்தின் தந்தையாவார். 75 வயதான அவர் ஓய்வுபெற்ற அரச வைத்தியர் என ஓஷல ஹேரத் குறிப்பிட்டார். வீட்டில் இருந்த அனைவரையும் வேறிடம் செல்லுமாறு கூறிவிட்டு தனது தந்தையிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதாகவும் தொலைபேசிகள், மடிக்கணினிகளை பெற்றுக்கொண்டதாகவும் ஓஷல ஹேரத் தெரிவித்தார். பின்னர் பொலிஸாரால் தனது தந்தை கைது செய்யப்பட்டதாகக் கூறிய ஓஷல ஹேரத், அவரை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். தனது தந்தையின் அறிவுறுத்தலின் பேரிலேயே தேவாலயத்தில் கைக்குண்டை வைத்ததாக கைதான நபர் கூறியதன் அடிப்படையில் தனது தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் கூறினார். இதேவேளை, கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பொலிஸ் விசாரணை தொடர்பாக திருப்தியடைய முடியாது என கூறியிருந்தார். தேவாலயத்திற்கு முற்பகல் வேளையில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர் தொடர்பில் CCTV-களில் பதிவாகியிருந்த காட்சிகள் கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவும் பேராயர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.