Colombo (News 1st) விசேட பொருட்கள், சேவைகளுக்கான வர்த்தக வரியை நீக்குமாறு வலியுறுத்தி நிதியமைச்சு முன்பாக தேசிய வருமான, சுங்க மற்றும் வரி தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
மதுபானம், சிகரெட், வாகனங்கள், தொலைத்தொடர்புப் பொருட்கள், சூதாட்டம், கேளிக்கை விடயதானங்களுக்கு இந்த வரி விதிக்கப்படுகின்றது.
குறித்த விசேட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வர்த்தக வரிகளுக்கு அமைய, திறைசேரியின் செயலாளரினால் நியமிக்கப்படும் பிரதி செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மற்றுமொரு பிரிவால் இந்த வரிகள் சேர்க்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.
அரசாங்க வரியினை வசூலிக்கும் மூன்று நிறுவனங்கள் இதனால் அழிவடைவதுடன், அரசாங்கத்திற்கு வரி வருமானம் இழக்கப்படும் நிலை காணப்படுவதாக குறித்த நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தமது போராட்டம் தொடர்பிலான மகஜரை போராட்டக்காரர்கள் நிதியமைச்சிடம் கையளித்தனர்.
இதேவேளை, தேசிய வியாபார பாதுகாப்பு சபை இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பேரணியாக சென்றவர்கள், மக்கள் வங்கி தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மக்கள் வங்கி வரை பேரணியாக சென்று உள்நாட்டு வியாபாரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தினர்.
