by Staff Writer 18-01-2022 | 8:20 PM
Colombo (News 1st) ஜனநாயக ரீதியில் மக்களின் வாக்குகளால் தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அனைத்து மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாகவும் தேர்தலின் போது வாக்களிக்காத மக்கள் தொடர்பிலும் குறித்த பொறுப்பினை நிறைவேற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சவால்களை வெற்றிகொள்வதற்கு தலைமைத்துவம் வழங்கத் தயார் என புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றிய போது ஜனாதிபதி கூறினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமானது.
சம்பிரதாய நடைமுறைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கி, புதிய கூட்டத்தொடர் ஆரம்பமானது. மரியாதை அணிவகுப்பு, வாகனப் பேரணி , குதிரைச் சவாரி என்பன இன்று இடம்பெறவில்லை.
புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றிய ஜனாதிபதி பகிரங்க அழைப்பொன்றை விடுத்தார்.
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வௌியேயும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் பொறுப்புகளை நிறைவேற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை எவ்வேளையிலும் சர்வதேச சட்டங்களுக்கும் பிரகடனங்களுக்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தனது உரையின் போது கூறினார்.
தனது ஆட்சிக் காலத்தில் எந்த வகையிலும் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவதுடன், சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்படும் கண்காணிப்புகளுக்கு உரிய முறையில் பதில் வழங்க எவ்வேளையிலும் தயாராக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை சுதந்திர இறைமையுள்ள நாடு எனவும் பலம் பொருந்திய நாடுகளுக்கிடையில் நிலவும் மோதல்களில் தலையிட வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.
விவசாயக் கொள்கை தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.
சில தீர்மானங்கள் பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதனால், அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. அது எவ்வாறாக அமைந்தாலும், பசுமை விவசாயத்தை உருவாக்குவது தொடர்பிலான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போது எதிர்நோக்கியுள்ள வௌிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை பாரிய பொருளாதார சவால் எனவும் ஜனாதிபதி கூறினார்.
மொத்த மாதாந்த வருமானம் 1000 மில்லியன் டொலரை விட குறைவடைந்துள்ள நிலையில், எரிபொருள் கொள்வனவிற்காக மாத்திரம் மாதாந்தம் 350 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் சுமார் 70 வீதம் வாகனங்களுக்கு தேவைப்படுவதாகவும் மின் உற்பத்திக்கு 21 வீதம் தேவைப்படுவதாகவும் கைத்தொழில் துறைக்கு 4 வீதம் தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் போது, மின்சக்தியினால் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க எதிர்பார்ப்பதாகக் கூறிய ஜனாதிபதி, வாகனங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை முடியுமானளவு மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியை பயன்படுத்தி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.