by Staff Writer 18-01-2022 | 6:44 PM
Colombo (News 1st) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் , மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரால் பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட விரிவுரையாளர், பல்கலைக்கழகத்தில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் அறியக்கிடைத்ததும், விரிவுரையாளருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர், முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழகத்திலிருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மாணவிக்கு தேவையான உளநல ஆலோசனைகளை வழங்கி, கற்றல் நடவடிக்கையை தொடர்வதற்கு தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கூறினார்.