தமிழ் கட்சிகளின் கோரிக்கை கடிதம் கோபால் பாக்லேயிடம் கையளிப்பு

தமிழ் கட்சிகளின் கோரிக்கை கடிதம் கோபால் பாக்லேயிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2022 | 8:26 pm

Colombo (News 1st) 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த கோரிக்கை கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் இன்று (18) மாலை கையளிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்திய – இலங்கை உடன்படிக்கையும், தமிழ் பேசும் மக்களின் ஆட்சி அதிகார பகிர்விற்கான அரசியல் அபிலாசைகளும் என்ற தலைப்புடன் குறித்த கோரிக்கைக் கடிதம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் முன்மொழியப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வலியுறுத்த வேண்டும் என பிரதமடர் மோடியிடம் தமிழ் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதற்கமைய, 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அக்கட்சிகளின் முதலாவது கோரிக்கையாக அமைந்துள்ளது.

தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமை அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வடக்கு, கிழக்கின் மக்கள் தொகை பரம்பல் வடிவத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம உரிமை மீறல் மற்றும் பாரபட்சம் என்பவற்றை உடனடியாக நிறுத்தி முழுமையான குடியுரிமை மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துமாறும் தமிழ் கட்சிகள் இந்திய பிரதமரை கோரியுள்ளன.

தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் மீளப்பெறப்பட்டு இந்த சட்டத்தின் கீழ் சிறையிலிடப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் நியாயமாகவும் முழுமையாகவும் கையாளப்பட வேண்டும் எனவும், அனைத்து இன மக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு காரணமாக தமிழர்களும் முஸ்லிம்களும் தமது பாரம்பரிய சட்டங்களை கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் ஏழு கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக தயாரித்துள்ள கடிதத்தின் மூலம் இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் சகல தரப்புகளாலும் தௌிவாக மேற்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்த வலியுறுத்துமாறும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையை பயன்படுத்தும் வகையில், தம் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் கண்ணியத்துடனும் சுய கௌரவத்துடனும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத நாட்டிற்குள் ஏற்படும் அமைப்பில் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்