புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

by Staff Writer 17-01-2022 | 3:03 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு நாளை (18) நள்ளிரவு 12 மணி முதல் முற்றாக தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரவித்துள்ளது. அதற்கிணங்க, பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்வதற்கும் நடத்துவதற்கும் பாட இணை விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் முற்றாக தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். மேலும்,​ பரீட்சைக்கான வினாக்களை அறியத்தருவதாகவோ அல்லது அதற்கு சமமான வினாக்களை வழங்குவதாகவோ தெரிவித்து சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்களை இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களின் வாயிலாக பகிரங்கப்படுத்த அல்லது அவற்றை தம்வசம் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. அத்துடன், இக்கட்டளையை மீறி செயற்படுவோர் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, பொலிஸ் தலைமையகத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.