டெல்லியில் 3 கிலோ வெடிகுண்டு மீட்பு

டெல்லியில் 3 கிலோ வெடிகுண்டு மீட்பு; பாரிய சேதங்கள் தவிர்ப்பு

by Bella Dalima 14-01-2022 | 6:14 PM
Colombo (News 1st) இந்தியத் தலைநகர் டெல்லியின் கிழக்கு பகுதியிலுள்ள சந்தையொன்றிலிருந்து 3 கிலோகிராம் நிறையுடைய வெடிகுண்டொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. உச்சபட்ச சேதங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் பரபரப்பாக இயங்கும் மலர்கள் விற்பனை செய்யப்படும் Ghazipur சந்தையில், கைவிடப்பட்ட பையொன்றிலிருந்து இந்த வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது. பின்னர் அதனை பொலிஸார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்துள்ளனர். ஜனவரி 26 ஆம் திகதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத தாக்குதலாக இது இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். மலர்கள் வாங்குவது போல, குறித்த சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர், வெடிகுண்டு பையுடன் மோட்டார் சைக்கிளையும் கைவிட்டுச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் கொண்ட பூ வியாபாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய வெடிவிபத்தும் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.