இரண்டு நாட்களுக்கு மின்சார துண்டிப்பு இல்லை

எரிபொருள் கிடைப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக மின்சார சபை தெரிவிப்பு

by Staff Writer 14-01-2022 | 8:37 PM
Colombo (News 1st) இன்றும் (14) நாளையும் (15) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான தேவை இல்லையென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று மின்சார பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. மின் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக நாளாந்தம் 1500 மெட்ரிக் தொன் டீசல் மின்சார சபைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதனிடையே, மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்து திடீர் கோளாறு ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவின் தலைமையில் நிபுணர் குழு செயற்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். மின் விநியோகம் தடைப்பட்டமையானது திடீர் கோளாறினால் இடம்பெற்ற ஒன்றா அல்லது நாசகார செயலா என்பது குறித்து நிபுணர் குழுவினால் ஆராயப்படுமென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.