by Staff Writer 14-01-2022 | 3:38 PM
Colombo (News 1st) மீரிகம - குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையூடான பொது போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.
கொழும்பில் இருந்து குருநாகல் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிராண்டா கூறினார்.
முதற்கட்டத்தில், கொழும்பு- கண்டி இடையில் 30 பஸ்களையும் கொழும்பு - குருநாகல் இடையில் 15 பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு - மாத்தளை அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் பரிசீலிப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம மற்றும் குருநாகலுக்கு இடையிலான பகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.