தேவாலயத்தில் கைக்குண்டு: பொலிஸ் குழு விசாரணை

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகநபரை கைது செய்ய 2 பொலிஸ் குழுக்கள் நியமனம்

by Staff Writer 14-01-2022 | 3:25 PM
Colombo (News 1st) பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட தினத்தில் தேவாலயத்திற்கு வருகை தந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் 02 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அருட்தந்தையினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், பாதுகாப்பு கேமராவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள தேவாலய வளாகத்தில் திருச்சொரூபத்திற்கு அருகிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (11) கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் கெம்பல் மைதானத்தில் அன்றைய தினமே குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெமட்டகொட பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன் தொடர்புகளை பேணியுள்ளதுடன், கைக்குண்டை தேவாலய வளாகத்திற்குள் வைத்தமையுடன் தொடர்புபட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று சந்தேகநபர்கள், தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.