by Staff Writer 14-01-2022 | 3:06 PM
Colombo (News 1st) உலகவாழ் இந்துக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இலங்கைவாழ் சகோதர இந்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இது பசுமை விவசாயத்திற்கான தேசிய கொள்கைக்கு பலன் தரும் என்பதே பெரும்பான்மையானோரின் நம்பிக்கையாக இருக்கின்றது. அதற்கான நோக்கத்திற்கு இந்த தைப்பொங்கல் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தை தருவதாக நம்புவதாக ஜனாதிபதி தமது பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பான நாட்டின் செழிப்பு மற்றும் வளத்திற்காக அர்ப்பணிப்புகளை செய்துள்ள மக்களுக்கு, சூரிய பகவானின் ஆசிர்வாதமும் பாதுகாப்பும் எப்போதும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இதேவேளை, இனம், மதம், மொழி ஆகியவற்றினால் நம் தேசம் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என சொல்வதிலே பெருமைகொள்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இத்தைத்திருநாளானது இன, மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிப்பதாக பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அனைத்து மக்களும் நிறைந்த சௌபாக்கியத்துடன் அமைதியும் சமாதானமும் நின்று நிலைக்கும் வகையில், மகிழ்வோடு வாழ இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் எம்மால் இழைக்கப்பட்ட தவறுகளிலிருந்து திருந்தி, புதிய எதிர்பார்ப்புகளுடன் புத்தாண்டை அணுகுங்கள் என்பதே தைப்பொங்கல் திருநாளின் ஊடாக வழங்கப்படும் செய்தி என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பிறந்திருக்கும் தைத்திருநாள் இன பேதங்கள் இன்றி, நாடு முழுவதும் பொங்கல் வழங்கி, கருணை உள்ளத்துடன், ஒத்துழைப்பு, சமத்துவத்துடன் தற்போதைய COVID-19 தொற்றிலிருந்து விடுபடும் வளமான நாளையாக அமையட்டும் எனவும் சபாநாயகர் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கலை மனிதர்களுக்கிடையேயான நட்புறவை வளர்ப்பதற்கான, பரஸ்பர புரிதலுக்கான வாய்ப்பாக அறிமுகப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இயற்கையோடு இணைந்த தைப்பொங்கல் போன்ற கலாசார வைபவங்கள் இக்காலத்தில் அவசியமானதாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.