இடைநடுவில் நிறுத்தப்பட்ட ரயில்கள்; வீதி மறியலில் ஈடுபட்ட பயணிகள்

இடைநடுவில் நிறுத்தப்பட்ட ரயில்கள்; வீதி மறியலில் ஈடுபட்ட பயணிகள்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2022 | 10:20 pm

Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

எனினும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் இன்று மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, ரயில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

முன் அறிவித்தல் இன்றி ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையினால் பல ரயில்கள் இடையில் நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மற்றுமொரு ரயில் கொட்டகலை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. பின்னர் பயணிகள் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டலை நகரில் வீதி மறியலில் ஈடுபட்டனர்.

15 நிமிடங்கள் வரை அவர்கள் வீதியை மறித்து கவனயீர்ப்பில் ஈடுபட்டதையடுத்து, திம்புல பத்தன பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று பஸ் வசதியை வழங்குவதாக வாக்குறுதியளித்தன் பின்னர் கவனயீர்ப்பு நிறுத்தப்பட்டது.

இதனிடையே, பெலியத்தையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் முற்பகல் 11 மணியளவில் அம்பலாங்கொடை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

மூன்று மணித்தியாலங்களின் பின்னர் பயணிகள் இன்றி ரயில் பயணித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்