ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 13-01-2022 | 3:42 PM
Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்​பை முன்னெடுத்துள்ளனர் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். கொழும்பு கோட்டை, மருதானை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு வருகை தந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காமையாலேயே இந்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார். பயணிகள் போக்குவரத்து ரயில் அட்டவணையை வழமைக்குக் கொண்டு வருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இரவு தபால் போக்குவரத்து சேவை, நீண்ட போக்குவரத்து ரயில் சேவைகள், காங்கேசன் துறைக்கான ரயில் சேவைகள் ஆகியவற்றுக்கு அனுமதி பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டதன் பின்னர் ரயில்வே திணைக்களத்தினால் அவை இரத்து செய்யப்பட்டுள்ளதால் நீண்ட விடுமுறையில் சொந்த இடங்களுக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டினார்.
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளருக்கு இது தொடர்பில் தௌிவுபடுத்தியும் உரிய பதில் கிடைக்கவில்லை. ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கமும் ஓட்டுநர்களின் சங்கமும் கூறும் வகையில் செயற்படுகின்றார்கள். அவர்களுக்கு தேவையாக நேரத்தில் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன. இவையனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்தோம்
என சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, 80 அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறை காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.