தங்க நகைகள் திருட்டு: மட்டக்களப்பில் நால்வர் கைது

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என கூறி தங்க நகைகள் திருட்டு: மட்டக்களப்பில் நால்வர் கைது

by Staff Writer 13-01-2022 | 3:48 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என கூறி திருட்டில் ஈடுபட்ட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லாவெளி பகுதியில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என கூறி கடந்த 5 ஆம் திகதி 4 பவுன் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மூன்றாவதாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருட்டுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணமும் தங்க நகைகளை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய காரொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்பது விசாரணைகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் வௌ்ளாவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.