லிட்ரோ தலைவர் பதவிக்கு மொட்டுக் கட்சியின் நிர்வாக செயலாளரை நியமிக்கும் முயற்சி ஜனாதிபதியால் நிறுத்தம்

லிட்ரோ தலைவர் பதவிக்கு மொட்டுக் கட்சியின் நிர்வாக செயலாளரை நியமிக்கும் முயற்சி ஜனாதிபதியால் நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2022 | 7:58 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (13) முற்பகல் கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு நிறுவன வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

எதிர்வரும் சில தினங்களுக்குள் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்கு எரிவாயு நிறுவனம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதான நடவடிக்கை பிரிவிற்கு சென்ற ஜனாதிபதி, கப்பலிலிருந்து எரிவாயு இறக்கப்படுவது வரையான செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததாகவும் ஊழியர்களுடன் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெஷார ஜயசிங்க, எரிவாயு நிறுவனத்தை கண்காணித்துக் கொண்டிருந்த போது, லிட்ரோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை, புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு தீர்மானித்திருந்தது.

பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேனுக்க பெரேராவை புதிய தலைவராக நியமிக்கவே அவர்கள் தீர்மானித்திருந்தனர்.

காப்புறுதி கூட்டுத்தாபனம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கீழ் இயங்குகின்றது.

எவ்வாறாயினும், புதிய தலைவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி இன்று பிற்பகல் இரத்து செய்ததாக தெரியவருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்