வெலிக்கடை சிறைக் கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு: எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை

வெலிக்கடை சிறைக் கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு: எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2022 | 6:55 pm

Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் 8 கைதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எமில் ரஞ்சன் மீதான 4 குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதிகள் கொலை வழக்கு தொடர்பில் நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவர் அடங்கிய விசேட நீதிபதிகள் குழாமினால் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் எதிராக 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்ட போதிலும், சட்டமா அதிபரிடம் வழக்குத் தாக்கல் செய்வதற்கு 8 கைதிகள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. அதன் அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்