விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மனோ கணேசன் ஆஜர்

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் மனோ கணேசன் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2022 | 4:00 pm

Colombo (News 1st) விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த காலத்தில் செயற்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை பெறல், விசாரணைகளை நடத்துதல், அறிக்கையிடல், பொருத்தமான பரிந்துரைகளை முன்வைத்தல் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கே பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, கோட்டாபய அரசாங்கம் ஊழலை விசாரிக்காமல், ஊழல் தொடர்பில் விசாரித்தவர்களை விசாரிப்பதாக மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

விசாரணை தொடர்பான அறிவித்தல் சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பப்பட்டிருந்ததால், தான் அதனை நிராகரித்து விட்டு, தமிழ் மொழியில் அனுப்பக் கோரியதாக அவர் கூறினார்.

தமிழில் அறிவித்தல் கிடைத்ததன் பின்னரே விசாரணைக்கு ஆஜரானதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன்,

இலங்கை அரசியலமைப்பின் நான்காவது அத்தியாயம் மொழிகள் தொடர்பான உரிமைகளை உறுதிப்படுத்துகின்றது. அதில் உள்ள 22 ஆவது விதியில் இலங்கை குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ் சிங்களம் அல்லது ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் பதில்களை பெறுவதற்கான உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எல்லா அரச அலுவலகங்களிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என அரசியலமைப்பு சொல்கிறது. ஆகவே, அந்த உரிமை இங்கு உறுதிப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தினால் கையெழுத்திட மறுத்து விட்டேன்.  எனக்கு உசிதமான இன்னொரு தினத்தில் விசாரணை நடத்துவதற்கு அவர்கள் உடன்பட்டிருக்கிறார்கள்

என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்