இலங்கைக்கு ஹங்கேரியினால் வட்டியில்லா கடன்; 2 மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன

இலங்கைக்கு ஹங்கேரியினால் வட்டியில்லா கடன்; 2 மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2022 | 9:44 pm

Colombo (News 1st) ஹங்கேரியின் வட்டியில்லா கடன் மூலம் கொஹூவல மற்றும் கெட்டம்பே பிரதேசங்களில் இரண்டு மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

ஹங்கேரியின் Exim வங்கியினால் இதற்கு 52 மில்லியன் யூரோ வட்டியில்லா கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடனை மீள செலுத்த 18 வருடங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 3 வருட சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக ஹங்கேரிய வர்த்தக மற்றும் வௌிவிவகார அமைச்சர் Péter Szijjártó குறிப்பிட்டார்.

ஹங்கேரியின் வர்த்தக மற்றும் வௌிவிவகார அமைச்சர் Péter Szijjártó இன்று இலங்கை வந்தடைந்தார்.

இன்று (12) அதிகாலை இலங்கை வந்தடைந்த ஹங்கேரிய வௌிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சரை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பின்னர் கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் அவர் கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து, கொஹூவலயில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாண பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொஹுவலயில் இருந்து ஹொரணை வரை அமைக்கப்படவுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 297 மீட்டர் ஆகும்.

ஹங்கேரியின் வர்த்தக மற்றும் வௌிவிவகார அமைச்சர் நியூஸ்ஃபெஸ்டிற்கு வழங்கிய விசேட செவ்வியில், தமது நாடு வௌிநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என குறிப்பிட்டார்.

அவர் இன்று மாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்