தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கு எதிராக மனு தாக்கல்

COVID-19 தடுப்பூசியை சிறுவர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவதற்கு எதிராக மனு தாக்கல்

by Staff Writer 11-01-2022 | 3:42 PM
Colombo (News 1st) COVID-19 தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ்பட்ட சிறார்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவதனூடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்மானிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. COVID தொற்று மற்றும் தொற்று ஒழிப்பு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாத்திரமே அறிக்கைகள் வௌியிடப்படும் என இதற்கு முன்னர் நீதிமன்றத்தின் முன்னிலையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், சுகாதார அமைச்சர் இந்த விடயம் தொடர்பான அறிவிப்புகளை வௌியிட்டுள்ளமையினூடாக குறித்த இணக்கப்பாடு மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தேவையான விடயங்களை மன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் போது அவர்களின் பெற்றோர்களது விருப்பத்தையும் பெற்றுக்கொள்வது பொருத்தமானது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். வைத்தியர்களான தாரணி ராஜசிங்கம், ரஞ்சித் சேனானி செனவிரத்ன, நிர்மலால் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர். சுகாதார அமைச்சர், சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். COVID தடுப்பூசி கட்டாயம் ஏற்றிக்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. COVID தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தினூடக நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அச்சுறுத்துவது சட்ட விரோதமானது என மனுவினூடாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது 18 வயதிற்கு கீழ்பட்ட சிறார்களுக்கு COVID தடுப்பூசியை கட்டாயமாக்குவதனூடாக அரசியலமைப்பின் 12 (01) , 14(01) G, 14(01) H ஆகிய கட்டளைகளினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்மானிக்குமாறு இந்த மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.