சீனாவிடமிருந்து இலங்கைக்கு நாணய பரிமாற்று கடன் வசதி

சீனாவிடமிருந்து இலங்கைக்கு நாணய பரிமாற்று கடன் வசதி

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2022 | 9:06 pm

Colombo (News 1st) பெய்ஜிங்கின் உயர் நிர்வாக பீடத்தினால் அனுமதி வழங்கப்பட்டு, இலங்கைக்கு வழங்கிய 1.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான 10 பில்லியன் யுவான் நாணய பரிமாற்று கடன் வசதித் திட்டமானது (Swap) மிகவும் விசேடமானதும் தனித்துவமானதும் என இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக நாணய பரிமாற்று கடன் வசதித் திட்டத்தை டொலருக்கு மாற்ற முடியாத நிலைப்பாடு காணப்படுகின்ற நிலையில், சீன தூதுவர் இந்த கடன் வசதி ஏன் சிறப்பானதாகவும் தனித்துவமானதாகவும் உள்ளதென்பதைக் குறிப்பிடவில்லை.

குறித்த ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், குறித்த ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் கடன் வசதி இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஏனைய விடயதானங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என The Economic இணையதளம் தெரிவித்துள்ளது.

சீன நாணய பரிமாற்று கடன் வசதித் திட்டத்தினை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்த முடியுமா ?

சர்வதேச நாணய நிதியத்திற்கான கதவுகளை இலங்கை திறந்துள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதற்கு எமது கதவுகளைத் திறந்து வைத்துள்ளோம். அத்துடன் நாங்கள் இந்தியா , சீனா மற்றும் ஜப்பானுடன் நாட்டிற்கு ஆதரவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்

என ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1.5 பில்லியன் நாணய பரிமாற்ற வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில், இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நாணய பரிமாற்ற வசதி தொடர்பில் இந்தியா இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்​லை.

எனினும், இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் கூட்டுத் திட்டமாக திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ் அந்நாட்டிலிருந்து 500 பஸ்களையும் 750 ஜீப்களையும் கொள்வனவு செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புது டெல்லிக்கு விஜயம் செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றைய தினமான 10 ஆம் திகதி முதல் நாளைய தினமான 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு இதற்கு முன்னர் திட்டமிட்டிருந்த நிலையில், பாரதத்தின் COVID நிலைமையினை கவனத்திற்கொண்டு குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்