by Staff Writer 09-01-2022 | 8:35 PM
Colombo (News 1st) கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை, 8 பெட்டிகளுடன் இன்று (09) பயணத்தை ஆரம்பித்தது.
இன்று (09) அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில், நண்பகல் 12.15 மணிக்கு யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்தது.
மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில், 1.37 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்தது.
இந்த கடுகதி ரயில் இரவு 8 மணிக்கு கொழும்பு - கோட்டையை வந்தடையும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.
இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவைக்கு பதிலாக இன்றிலிருந்து மேலும் 3 பயணிகள் பெட்டிகள் இணைக்கப்பட்டு, 8 பயணிகள் பெட்டிகளைக் கொண்ட புதிய ரயிலொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடன் உதவியின் கீழ் குறித்த ரயில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.