லசந்த கொலை செய்யப்பட்டு 13 வருடங்கள்: உண்மை எப்போது வௌிப்படும்?

by Staff Writer 08-01-2022 | 8:05 PM
Colombo (News 1st) அச்சமின்றி உண்மையை வெளிக்கொணர்ந்த மனிதநேயமிக்க ஊடகவியலாளரும் நியூஸ்ஃபெஸ்டின் நெருங்கிய நண்பருமான லசந்த விக்ரமதுங்கவை இழந்து இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. லசந்த விக்ரமதுங்க Sunday Leader பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தமது உயிரையும் துச்சமென எண்ணி சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளையும் மோசடிகளையும் மக்களுக்கு துணிச்சலாக பகிரங்கப்படுத்தினார். எவராலும் நெருங்க முடியாத தகவல்களை மிக சாதுரியமாக அண்மிக்கும் ஆளுமையும் திறனும் கொண்ட அவர் அதிசிறந்த ஆய்வுக் கட்டுரை ஆசியராக பல மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக பல தடவைகள் உயிர் அச்சறுத்தலை அவர் எதிர்கொண்டார். இறுதியாக 2009 ஜனவரி 8 ஆம் திகதி காலை லசந்தவின் உயிர் பறிக்கப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவின் தொழிற்தளத்திற்கு பயணிக்கும் வழியில் இரத்மலானை - அத்திட்டிய வீதியில் வழிமறித்த ஆயுதக் குழுவொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது லசந்தவிடம் பேனாவும், குறிப்பேடும் மாத்திரமே இருந்தன. சர்வதேச ரீதியில் பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட லசந்த விக்ரமதுங்க அச்சமின்றி முன்னெடுத்த பயணத்தால் அவர் கொல்லப்பட்ட பின்னரும் IPI World Press Freedom Heroes விருதினால் கௌரவிக்கப்பட்டார். இந்த சிரேஷ்ட ஊடகவியலாளரை மௌனிக்க செய்த கொலைக் கும்பல் சுதந்திரமாக நடமாடும் நிலையில், அவரது மரணத்தின் ஊடாக அரசாங்கத்தை மாற்றி ஆட்சிக்கு வந்த தரப்பினரும் காலம் கடத்தும் செயற்பாட்டையே பின்பற்றினர். நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த லசந்தவின் புகழுடல் 2016 செப்டம்பர் 27 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட போதிலும் இன்னும் இந்தக் கொலைக்குற்றத்திற்கு நீதி கிடைக்கவில்லை. லசந்தவின் உயிர் பறிக்கப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்பு தெபானம MTV/MBC கலையகத்தின் பிரதான கட்டுப்பாட்டறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார். மகிழ்ச்சியான தருணங்களை விட துன்பங்களின் போது நெருக்கமாக இருந்த லசந்த விக்ரமதுங்க தெபானம கலையகத்திற்கு தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் வருகை தந்திருந்தார். குற்றவாளிகள் எப்போதும் உண்மைக்கு அஞ்சுவர். உண்மையை மறைக்க முடியாது. அது ஒருநாள் நிச்சயம் வெல்லும்!