பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு; 21 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு; கார்களுக்குள் சிக்கிக்கொண்ட 21 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

by Bella Dalima 08-01-2022 | 5:54 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி (Murree) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்நிலையில், முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக கார்களுக்குள் பயணிகள் சிக்கிக்கொண்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தடையால் அப்பகுதிக்கு செல்லும் வழியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் - முர்ரி நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. முர்ரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.