கணினி சாட்சியங்களின் பட்டியல் சமர்ப்பிப்பு

முறிகள் மோசடி வழக்கு: கணினி சாட்சியங்களின் பட்டியல் சமர்ப்பிப்பு

by Bella Dalima 07-01-2022 | 4:29 PM
Colombo (News 1st) 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள கணினி சாட்சியங்களின் பட்டியலை சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தின் விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளார். நீதிபதிகள் குழாமின் அனுமதிக்கமைவாக சாட்சிப் பட்டியலின் பிரதிகள், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் அடங்கிய விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.