மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 07-01-2022 | 8:44 PM
Colombo (News 1st) 30 அமைச்சுப் பதவிகளை தவிர அரசியலமைப்பிற்கு புறம்பாக வேறு எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். மொனராகல - சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அடுத்த மூன்று வருடங்களுக்கு பூரண ஒத்துழைப்பை நல்குமாறும் ஜனாதிபதி அரச ஊழியர்கள் அனைவரிடமும் கோரினார். பொதுமக்களுக்கான வலுவான அரச சேவையை உருவாக்கும் பொருட்டு, தாம் எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் செல்லவுள்ளதுடன், கிராமத்துடன் கலந்துரையாடல் திட்டத்தை மீள ஆரம்பித்து பொதுமக்களின் எதிர்பார்ப்பை துரிதமாக நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றை எதிர்பார்த்திருந்தாலும் அரசியலமைப்பிற்கு அமைய வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப்போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொதுமக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவது எதிர்க்கட்சியினரின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.