சட்டவிரோதமாக இலங்கை வர முயன்றவர் கைது

தனுஷ்கோடி வழியாக சட்டவிரோதமாக இலங்கை வர முயன்றவர் கைது

by Bella Dalima 07-01-2022 | 7:33 PM
Colombo (News 1st) தமிழகத்தின் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக வர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - மல்லாவியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சுற்றுலா விசாவில் விமானம் மூலம் தமிழகம் சென்ற குறித்த நபர் அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளார். விசா காலாவதியான நிலையில், சட்டவிரோதமாக படகில் இலங்கை திரும்ப முயற்சித்தபோது தனுஷ்கோடியில் வைத்து கடலோர காவல்துறையினரால் 22 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் சம்பவத்திற்காக தமிழகத்தில் இவர் பதுங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபரான இலங்கை பிரஜையை இராமேஷ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.