எண்ணெய் குதங்கள் உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்பு

எண்ணெய் குதங்கள் உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 07-01-2022 | 8:08 PM
Colombo (News 1st) திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பிலான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதனிடையே, திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்ட உடனபடிக்கையுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு இன்று (07) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வக்கமுல்ல உதித்த தேரர் சார்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். வழக்கின் பிரதிவாதிகளாக ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர், ஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சர், பாதுகாப்பு செயலாளர், எரிசக்தி அமைச்சர், கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட 47 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர் . திருகோணமலை எண்ணெய் குதங்களை மூன்று பகுதிகளாக பிரித்து அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்திய எரிபொருள் நிறுவனம் உள்ளிட்ட தரப்பினர் நேற்று (06) கொழும்பில் கைச்சாத்திட்டனர். நிதி அமைச்சு,பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் , Trinco Petroleum Terminal நிறுவனம் மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆகிய தரப்பினர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த 99 எண்ணெய் குதங்களில் 85 குதங்களின் நிர்வாகம் இலங்கைக்கு கிடைத்துள்ளமை வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் படி 14 குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும், 24 குதங்கள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் எஞ்சிய 61 குதங்கள் Trinco Petroleum Terminal நிறுவனத்திற்கும் காணியுடன் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. Trinco Petroleum Terminal நிறுவனத்தின் 51 வீத பங்குகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் 49 வீத பங்குகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் உரித்தாகின்றன. நேற்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஏதாவது ஒரு காரணத்தினால் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டால், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் குதங்களை Trinco Petroleum Terminal நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். இந்த நிறுவனங்களுக்கு இடையிலான எந்தவொரு பிணக்கும் சிங்கப்பூரிலுள்ள சர்வதேச மத்தியஸ்த நிலையமொன்றின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.