இலங்கைக்கு ஒத்துழைப்பதாக இந்தியா தெரிவிப்பு

இக்கட்டான காலப்பகுதியில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

by Bella Dalima 07-01-2022 | 4:02 PM
Colombo (News 1st) தற்போதைய இக்கட்டான காலப்பகுதியில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸூடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, இந்திய வௌிவிவகார அமைச்சர் இதனை கூறியதாக The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்ஷங்கர் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுடன் நேற்று (06) கலந்துரையாடினார். இருதரப்பு உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் தனித்தனியே தொலைபேசியூடாக அவர் கலந்துரையாடியதாக The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, இந்திய வௌிவிவகார அமைச்சர் நேற்றைய தொலைபேசி கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இலங்கை வௌிவிவகார அமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை கூறிக்கொள்வதாகவும் நம்பிக்கை மிகுந்த நண்பனான இந்தியா, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கான ஒத்துழைப்பை வழங்குமெனவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இதன்போது கூறியுள்ளார். இலங்கையுடன் நெருங்கிய தொடர்பை பேணும் வகையில் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளதாக The Hindu பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்