ஆவணத்தில் இதுவரை கையெழுத்திடாத மாவை

ஆவணத்தில் இதுவரை கையெழுத்திடாத மாவை; வௌியில் இருந்து ஆதரவு தரும் மனோ

by Bella Dalima 07-01-2022 | 8:26 PM
Colombo (News 1st) 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தும் ஆவணம் வரைவில் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று இந்த ஆவணத்தில் கையொப்பமிடுவார் என கூறப்பட்டிருந்தாலும், அவர் இன்று கையொப்பமிடவில்லை இந்த ஆவணம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் இணைந்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவும் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை. இந்த ஆவணத்திற்கு வௌியில் இருந்து ஆதரவு தருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்றால், மலையகத் தமிழ் மக்களின் அபிலாஷைகளும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். இரண்டிற்கும் சரியான இடம் கிடைக்காத காரணத்தினால் தாம் வௌியில் வந்துவிட்டதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டினை அறிவதற்கு மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை. எனினும், அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் H.M.M. ஹாரிஸ், கிழக்கிற்கு தனியான மாகாண சபை முறைமை இருக்கிறதா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.