13 வருடங்கள் கடந்தும் சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள்

13 வருடங்கள் கடந்தும் சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள்

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2022 | 10:33 pm

Colombo (News 1st) மக்களின் தகவல் அறியும் உரிமை மீது கொடிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் 13 ஆவது வருடமாக 2022 ஆம் ஆண்டு வரலாற்றில் எழுதப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இன்று போன்றதொரு நாளில் ஆயுதம் தரித்த குண்டர் குழு, சிரச ஊடக வலையமைப்பின் தெபானம கலையகத்தின் மீது வெட்கமில்லாமல் மேற்கொண்ட தாக்குதல் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்தது.

சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அன்று அதிகாலை 2.10 அளவில் கலையகத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய குழு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியது.

மக்களுக்கு தகவல் வழங்கும் ஊடக வலையமைப்பின் அதி நவீன கணினி கட்டமைப்புடன் நவீனமயப்படுத்தப்பட்டிருந்த பிரதான கட்டுப்பாட்டு அறையே குண்டர்களின் இலக்காக இருந்தது.

தமது கண்ணில் பட்ட அனைத்தையும் நாசமாக்கிய குண்டர் குழு கிளைமோர் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு கட்டுப்பாட்டு அறையை முற்றாக அழித்தது.

தாக்குதலின் பின்னர், அரச பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணைகளின் போது 8 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் குண்டொன்று அங்கிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு எம்மை மௌனிக்க வைப்பது தாக்குதலை மேற்கொண்டவர்களின் நோக்கமாக இருந்தாலும், ஒரு சில மணித்தியாலங்களில் மீண்டும் அனைத்து அலைவரிசைகளையும் செயற்படுத்த எம்மால் முடிந்தது.

உடனடியாக தெபானம வந்து இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க இரண்டு நாட்களின் பின்னர் நடுத்தெருவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மக்களுக்காக உண்மையான தகவல்களை வழங்கும் ஊடக வலையமைப்பொன்றை மௌனிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட வெட்கமில்லாத முயற்சியே இதுவெனக் கூறி தெபானம மீதான கும்பலின் தாக்குதலை உள்நாட்டு, வௌிநாட்டுத் தரப்பினர் வன்மையாகக் கண்டித்தனர்.

யார் மாற்றமடைந்தாலும், அன்று போன்று இன்றும் நாம் மக்களுடனேயே இருக்கின்றோம். அது நாளையும் அவ்வாறே தொடரும்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்