பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினருக்கு புலனாய்வுத் தகவல் எவ்வாறு கிடைத்தது: சுசில் பிரேமஜயந்த கேள்வி

by Bella Dalima 06-01-2022 | 8:09 PM
Colombo (News 1st) புலனாய்வுத் தகவலுக்கு அமைய சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அரசாங்கத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டிஆரச்சி நேற்று (05) தெரிவித்தார். இந்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் மூவர் நேற்று (05) ஊடகவியாலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து கலாநிதி சுசில் பிரேமஜயந்த பதவி விலக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர். இதன்போது,
அரச புலனாய்வுப் பிரிவில் இருந்து வரக்கூடிய சில தகவல்கள் அரசாங்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான தகவல்களாக இருக்க முடியும். மாற்று அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலானதாக இருக்க முடியும். அரசியல் நிலைமை தொடர்பிலானதாக இருக்க முடியும். அதனுடன் தொடர்புடைய உண்மைகளைத் திரட்டிய வகையிலேயே சுசில் பிரேமஜயந்த விலக்கப்பட்டார். அவ்வாறின்றி வெறுமனே தெல்கந்தயில் தெரிவித்த கருத்திற்காக மாத்திரம் அவர் பதவி விலக்கப்படவில்லை
என ஜானக திஸ்ஸ குட்டிஆரச்சி குறிப்பிட்டிருந்தார். அவர் தெரிவித்த இந்த கருத்து தொடர்பில் அரசாங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இன்று கருத்துத் தெரிவித்தனர். அரசாங்கத்தில் இருந்துகொண்டு வௌியில் சென்று பேச முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேனவோ சுசில் பிரேமஜயந்தவோ இருப்பதென்றால் இருக்கலாம், கஷ்டம் என்றால் விலகிச் செல்லலாம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இந்நாட்களில் சட்டத்துறை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத் தொகுதிக்கு அருகில் முன்னாள் இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார்,
என்னை போன்ற ஒருவருக்கு பின்னால் புலனாய்வுப் பிரிவு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நகரத்தில் சந்திக்கு சந்தி எரிவாயுவிற்காக வரிசையில் நிற்கும் மக்கள் என்ன சொல்கின்றார்கள் எனவும் மண்ணெண்ணெய்க்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள் என்ன சொல்கின்றார்கள் எனவும் சந்தையில் பொருட்களை வாங்கக் காத்திருக்கும் மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பது தொடர்பிலும் இன்று விவசாயிகள் ஏன் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது தொடர்பிலும் தகவல்களைத் திரட்டி அரசாங்கத்திடம் புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தாலேயே அரசாங்கத்திற்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்
என அவர் குறிப்பிட்டார். மேலும், திஸ்ஸ குட்டிஆரச்சி போன்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் புலனாய்வுத் தகவல்கள் சென்றது எவ்வாறு என சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பினார். இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஏனைய செய்திகள்