பிச்சையெடுக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது

சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கும் நிலையில் இலங்கை: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

by Staff Writer 06-01-2022 | 4:09 PM
Colombo (News 1st) சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆட்சியைக் கைப்பற்றி தக்க வைத்துக்கொள்ளவதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆளுந்தரப்பு அமைச்சர்களே மக்களை அச்சுறுத்தும் வகையிலும் எச்சரிக்கும் வகையிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து பேச ஆரம்பித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணா துன்ப நிலை இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வந்துவிடுமோ என்ற கவலை தமக்குள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா வகையிலும் தோல்வியுற்ற ஒரு அரசாங்கமாக மாத்திரமல்லாமல், நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான எத்தகைய வழியுமின்றி தவிக்கும் வீழ்ச்சியடைந்த ஒரு அரசாங்கமாகவும் இன்றைய அரசாங்கம் மாறியிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் கூறியுள்ளார். கடந்த ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில் 'உங்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் நாட்டை பொருளாதார ரீதியில் பலப்படுத்துகிறோம்' என்று சவால் விட்டவர்கள் இன்று நாட்டை சோமாலியாவைவிட மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.