தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்

by Bella Dalima 06-01-2022 | 4:28 PM
Colombo (News 1st) இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பிறழ்வைத் தொடர்ந்து தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இன்று (06) முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயற்பட அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், மருத்துவ சேவை செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 9 வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்து பஸ்கள் மற்றும் புறநகர் ரயில்களில் 50 வீதம் பயணிகள் மாத்திரமே அமர்ந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.