பயணத்தை கைவிட்டு பாதியில் திரும்பிச்சென்ற மோடி

பஞ்சாபில் எதிர்ப்பு; பயணத்தை கைவிட்டு பாதியில் திரும்பிச்சென்றார் மோடி

by Bella Dalima 05-01-2022 | 4:32 PM
Colombo (News 1st) பஞ்சாப்பில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற இந்திய பிரதமர் மோடி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மேம்பாலமொன்றில் சுமார் 20 நிமிடங்கள் தடைப்பட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்நிகழ்வில் கலந்துகொள்ளாமலேயே அவர் விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளார். இதுவொரு மிகப்பெரிய பாதுகாப்பு மீறலென மத்திய அரசாங்கம் சாடியுள்ளது. அத்துடன், பஞ்சாப்பின் காங்கிரஸ் அரசாங்கத்தையும் மத்திய உள்துறை அமைச்சு அறிக்கையொன்றினூடாக விமர்சித்துள்ளது. Hussainiwala-விலுள்ள தேசிய தியாகிகள் நினைவிடமொன்றை தரிசிப்பதற்காக பஞ்சாப்பின் பதின்டா (Bathinda) விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி இன்று (05) காலை சென்றடைந்தார். அதன் பின்னர் குறித்த நினைவிடம் வரை ஹெலிகொப்டரில் பயணிப்பதற்கே ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும், மழை மற்றும் அதனால் ஏற்பட்ட இருளால் அவ்வேளையில் ஹெலிகொப்டரில் பயணிக்க முடியாமற்போனது. சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்த போதிலும், இருள் விலகாததால், தரை மார்க்கமாக பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் பொலிஸ்மா அதிபர் உறுதிப்படுத்தியதையடுத்து, தரைவழி போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நினைவிடத்தை சென்றடைய 30 கிலோமீட்டர்கள் இருந்த வேளையில், பிரதமர் சென்ற வாகனத் தொடரணி மேம்பாலமொன்றை அடைந்த போது, அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர் மோடி மீளவும் பதின்டா விமான நிலையத்திற்கு திரும்பினார்.