தலைமன்னாரில் கைதான 12 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

தலைமன்னாரில் கைதான 12 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

by Staff Writer 05-01-2022 | 6:44 PM
Colombo (News 1st) இலங்கை கடலில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை, இலங்கை கடல் எல்லைக்குள் தமது படகின் வலைகள் உள்ளிட்ட பொருட்களின் தொடர்பினை அறுக்காமை, இலங்கை கடற்பரப்பினுள் தடை செய்யப்பட்ட இழுவைமடியை பயன்படுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் கடற்றொழில் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் இன்று கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் மன்றில் வாசிக்கப்பட்டபோது அதனை இந்திய மீனவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து மன்னார் நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறுவர் என்பதால், அவரை 2 வருட சிறுவர் நன்னடத்தை பிரிவில் வைத்து பராமரிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படுவதாகவும் நீதவான் அறிவித்துள்ளார். இலங்கை கடலுக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 19 ஆம் திகதி 12 இந்திய மீனவர்களும் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம்  ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதேவேளை, இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த யாழ். வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவரும் படகுடன் இன்று தமிழகத்தின் எழும்பூர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.