மத்திய வங்கி ஆளுநர் கட்டார் விஜயம் 

வதந்திகள் காரணமாக சில முதலீடுகளை இழக்க நேரிட்டுள்ளது: மத்திய வங்கி ஆளுநர் கவலை

by Staff Writer 05-01-2022 | 8:24 PM
Colombo (News 1st) ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதிர்ச்சியடைகின்ற சர்வதேச இறைமை முறி கடனை மீள செலுத்துவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். குறுகிய நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற வதந்திகள் காரணமாக சில முதலீடுகளை இழக்க நேரிடுகின்றமை தொடர்பில் கவலையடைவதாக மத்திய வங்கி ஆளுநர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதேவேளை, மத்திய வங்கி ஆளுநர் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், அவர் அந்நாட்டின் புதிய மத்திய வங்கி ஆளுநர் ஷேக் பந்தார் பின் மொஹமட் பின் சௌத் அல்தானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு நிதி உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.