by Staff Writer 04-01-2022 | 8:37 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான மகாராணியின் கோலை ஏந்திய குழுவினர் இன்று கண்டிக்குச் சென்றனர்.
விசேட கலாசார நிகழ்வு விக்டோரியா நீர்த்தேக்கம் அருகில் இன்று (04) காலை இடம்பெற்றது.
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான கோலை ஏந்திய குழுவினர் விக்டோரியா அணைக்கட்டின் பார்வையாளர் பகுதிக்கு இன்று சென்றனர்.
தேசிய ஒலிம்பிக் குழு அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பல்வேறு கலாசார அம்சங்களும் இந்த நிகழ்வை அலங்கரித்தன.
இதன்பின்னர், மகாராணியின் கோலை ஏந்திய குழுவினர் கன்னொருவ ரோயல் கல்லூரிக்கு சென்றனர்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானிய கவுன்சில் அதிகாரிகள், கண்டி மாவட்ட பாடசாலைகளின் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மகாராணியின் கோல் நாளை (05) ஹட்டனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.