பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

by Bella Dalima 04-01-2022 | 3:29 PM
Colombo (News 1st) பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, Omicron வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது. தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, லம்ப்டா என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. கடந்த நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான Omicron தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. B.1.640.2 என்று பெயரிடப்பட்டு  IHU என அழைக்கப்படும் அந்த வைரஸை பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்ஸின் Marseille நகருக்கு வந்த 12 பேருக்கு இந்த புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா Omicron வைரஸை விட அதிக நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Omicron-ஐ விட இது 46-க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை கொரோனா இதுவரை மற்ற நாடுகளில் கண்டறியப்படவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.