அரச வைத்திய அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை

நிறுவன ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 04-01-2022 | 4:33 PM
Colombo (News 1st) வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் அலரி மாளிகையில் இன்று (04) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காணப்பட்ட செயன்முறையை சில அதிகாரிகளின் விருப்பத்திற்காக மாற்ற முயற்சிப்பதனூடாக நெருக்கடிகள் ஏற்படும் என பிரதமர் கூறியுள்ளார். அரசியல் நோக்கில் சென்று அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாது, தொழிற்சங்கங்களுடன் நிறுவன ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். வைத்திய நிர்வாகத்தை சிரேஷ்ட, கனிஷ்ட என இரு பிரிவுகளாக பிரித்து செயற்படுத்தாது, ஒரே அடிப்படையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில், விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளார்.