நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்பு: தேர்தலுக்கு தயாராகின்றதா அரசாங்கம்?

நிதியமைச்சரின் நிவாரண அறிவிப்பு: தேர்தலுக்கு தயாராகின்றதா அரசாங்கம்?

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2022 | 8:27 pm

Colombo (News 1st) நிதியமைச்சர் நேற்று (03) அறிவித்த நிவாரணப் பொதி எந்தவொரு தேர்தலையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விடயம் அல்லவென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நிதியமைச்சரால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் நேற்று பிற்பகல் அறிவிக்கப்பட்டன.

அந்த நிவாரணப் பொதிக்கு ஏற்ப அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜனவரி மாதத்தில் இருந்து 5,000 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தனியார் பிரிவிற்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படுவதுடன், சமுர்த்தி பயனாளிகளுக்கு 1000 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

விளைச்சல் குறைந்தால் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு அடுத்த போகத்தின் போது மேலதிகமாக 25 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், அரிசி விலை அதிகரிக்காமல் இருக்க அதற்கான மேலதிக பணத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஒரு ஏக்கருக்கு 10,000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு, பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 15 கிலோ கோதுமை மாவை ஒரு கிலோ 80 ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தேவையான சந்தர்ப்பத்தில் உள்நாட்டு விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் 229 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

எனினும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்துள்ளமைக்கு ஏற்றாற்போன்று இந்த நிவாரணம் போதுமானதா என எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதனிடையே அரசாங்கம் இந்த நிவாரணப் பொதியை எதற்காக அறிமுகப்படுத்தியது?

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா விடுக்கும் அழுத்தம் இதற்கு காரணமா?

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில இந்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் அரசாங்கத்திற்குள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு நாட்டிற்கும் அடிபணியும் கலாசாரம் தம்மிடம் இல்லை எனவும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்