நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2022 | 5:14 pm

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் நாளை (05) காலை 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வலிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்திலும் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதனிடையே, இன்று காலை 8.30 வரையான 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அம்பாறை – ஆலையடிவேம்பு பட்டிமோடு பகுதியில் விளைநிலத்தில் பெருக்கெடுத்த வௌ்ளத்தினை வௌியேற்ற முயற்சித்தபோது நேற்று காணாமற்போனவர் புளியம்பத்தை கிராம ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆலையடிவேம்பு பகுதியை சேர்ந்த 55 வயதான விவசாயியே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று பெய்த கனமழை காரணமாக உருக்காமம் மற்றும் உன்னிச்சை குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு எல்லை வீதி மக்களும் தொடர் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வந்தாறுமூலை மேற்கு பகுதியில் வசிக்கும் 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வௌ்ளத்தினால் அசௌகரியங்களை எதிர்நொக்கி வருகின்றனர்.

சித்தாண்டியில் இருந்து ஈரளக்குளம் கிராமத்திற்கு செல்லும் 6 கிலோ மீட்டருக்கு மேலான தரைவழி போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில், தற்காலிக படகு போக்குவரத்து செயற்படுத்தப்பட்டுள்ளது.

சித்தாண்டி 4 , உதயன்மூலை, மதுரன்கேணிக்குளம், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வௌ்ளம் நிறைந்துள்ளது.

குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால், கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியிலும் வௌ்ளம் நிறைந்துள்ளது. இதனால் சுமார் 30-இற்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கான தரைவழி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதால், இராணுவத்தினரும் பிரதேச செயலகத்தினரும் இணைந்து படகு சேவையினை முன்னெடுத்து வருகின்றனர்.

கனமழை காரணமாக திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளியடி, பட்டிமேடு கிராமங்களை சேர்ந்த 25-இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கண்டி – தம்பலகாமம் பிரதான வீதியிலிருந்து பட்டிமேட்டிற்கு செல்லும் வீதியும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதால், குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா – பெரியாற்றுமுனை பகுதியிலும் கடல் நீர் நிறைந்துள்ளது. கடலில் இருந்து 70 மீட்டர் தூரத்திலுள்ள பெரியாற்றுமுனையில் கடல்நீர் நிறைந்துள்ளதால், குறித்த பகுதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்