இலங்கை மீனவர்களை விடுவிக்க அனுமதி

இலங்கை மீனவர்களை விடுவிக்க அனுமதி

by Staff Writer 03-01-2022 | 10:28 PM
Colombo (News 1st) எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரையும் விடுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மீனவர்களையும் அவர்களின் 2 படகுகளையும் விடுவிக்குமாறு நாகபட்டினம் மாவட்ட செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த படகு எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது. இதனை தொடர்ந்து ஒக்டோபர் 23 ஆம் திகதி சென்னை கடலோரக் காவற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், இயத்திரக் கோளாறு காரணமாகவே படகு எல்லை தாண்டி இந்திய கடற்பரப்பிற்குள் அடித்து வரப்பட்டதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களை விடுவிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மீனவர்களை விடுதலை செய்வதாயின் இயந்திரக் கோளாறு காரணமாக கரையொதுங்கிய படகும் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ். மீனவ அமைப்புக்கள் மற்றும் தமிழக மீனவ அமைப்புக்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனினும், படகை விடுவிப்பதில் நாகபட்டினம் மாவட்ட செயலாளர் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. கடந்த 26 ஆம் திகதி மாவட்ட செயலாளர் அருண் தம்புராஜினால் படகினை விடுவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, படகுடன் மீனவர்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி எழும்பூர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.