நெடுந்தீவில் கைதான 43 மீனவர்களுக்கு விளக்கமறியல்

நெடுந்தீவில் கைதான தமிழக மீனவர்கள் 43 பேருக்கு விளக்கமறியல்

by Staff Writer 31-12-2021 | 7:10 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 43 பேரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மீனவர்களின் விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 06 படகுகளையும் தொடர்ந்து தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார். இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களும் அவர்களின் 10 படகுகளும் தொடர்ந்தும் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுதித்தி யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, நேற்று (30) கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைப்பற்றப்பட்ட படகுகளில் ஒன்றை இரணைத்தீவு மக்களின் போக்குவரத்திற்கு வழங்கப்போவதாக குறிப்பிட்டார்.