எரிவாயு தொடர்பான நகர்த்தல் பத்திரம் பரிசீலனை

எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான நகர்த்தல் பத்திரம் பரிசீலனை

by Staff Writer 31-12-2021 | 8:15 PM
Colombo (News 1st) பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டரில் எஞ்சியுள்ள எரிவாயுவிற்கான பணத்தை செலுத்துவதற்கோ அல்லது அதற்காக புதிய எரிவாயு சிலிண்டரை விநியோகிப்பதற்கோ தேவையான பொறிமுறையை தயாரிக்கும் விடயம் எதிர்வரும் திங்கட்கிழமை (03) நடைபெறும் கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற மனு மீதான விசாரணையின் போது அரச சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க இதனை கூறினார். அபாயகரமான எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை எரிவாயு நிறுவனங்கள் மீறி செயற்பட்டுள்ளமையால், நாளாந்தம் குறைந்தபட்சம் 02 எரிவாயு வெடிப்பு சம்பவங்களாவது பதிவாவதாக நகர்த்தல் பத்திரமொன்றினூடாக நாகானந்த கொடித்துவக்கு சுட்டிக்காட்டியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த நகர்த்தல் பத்திரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபை செயற்பட்டுள்ளதாக சத்தியக்கடதாசியூடாக அதிகார சபையின் தலைவர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சீல் உடைக்கப்படாத எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக, மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க , சத்தியக்கடதாசியை மன்றுக்கு சமர்ப்பித்து கூறியுள்ளார். எரிவாயு சிலிண்டர்களில் காணப்படக்கூடிய அதிகபட்ச Propane அளவு 30 வீதமாக காணப்பட வேண்டும் என எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவித்ததாகவும் அரச சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நகர்த்தல் பத்திரம் மீதான விசாரணையை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.