உணவுப் பொருட்கள் பதுக்கல்; நுகர்வோர் விவகார அதிகார சபை புறக்கோட்டையில் தேடுதல்

by Bella Dalima 31-12-2021 | 3:14 PM
Colombo (News 1st) கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மொத்த களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் மா, கோதுமை மா மற்றும் அரிசி தொடர்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேடுதலின் போது சில களஞ்சியசாலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பால் மா, கோதுமை மா ஆகியவற்றை கட்டுப்பாட்டு விலையில் , அதே இடத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். உணவுப்பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என இந்த திடீர் தேடுதலின் போது நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி பீ.கொடகம குறிப்பிட்டார். சில மொத்த களஞ்சியசாலைகளில் தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தப்பட்டு, தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் அவற்றை விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் ஒரு சாரார் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி பீ.கொடகம சுட்டிக்காட்டினார்.