by Staff Writer 30-12-2021 | 7:22 PM
Colombo (News 1st) இலங்கையின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்திப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பிற்கு இணையாக, திருகோணமலை எண்ணெய் குதங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூட்டுத் திட்டத்தை தயாரிக்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கான நிதி உதவி இந்தியாவினால் வழங்கப்படவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களுக்குள் திருகோணமலை எண்ணெய் குதங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய கட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் வசதி பொதியின் கீழ், உணவுப்பொருட்களை இந்தியாவில் கொள்வனவு செய்யும் திட்டம், எண்ணெய் இறக்குமதிக்கு தனி கடன் வசதித் திட்டம் ஆகியன முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.