தமிழக மீனவர்களின் கைதிற்கு எதிராக மனு தாக்கல்

தமிழக மீனவர்களின் கைது கச்சத்தீவு உடன்படிக்கைக்கு எதிரானது என மதுரை கிளையில் மனு தாக்கல்

by Staff Writer 30-12-2021 | 4:30 PM
Colombo (News 1st) இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 68 பேர் கைது செய்யப்பட்டமை கச்சத்தீவு உடன்படிக்கைக்கு எதிரானது என தெரிவித்து இந்திய உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதால், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களையும், அவர்களின் 10 படகுகளையும் விடுவிக்க உத்தரவிடுமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு இந்திய உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதிகளான சி.வி.கார்த்திகேயன் மற்றும் எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலையில் நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது மீனவர்களின் விடுதலை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சார்பில் இதன்போது நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு மத்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் சார்பில் இந்திய உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் புத்தாண்டுக்கு முன்பு மகிழ்ச்சி நிலவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதிகள் இதன்போது இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பாக நாளைய தினத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வர மீனவர்கள் இன்று 10 ஆவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களை விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் முதலாம் திகதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.